Saturday, January 01, 2005

எரிச்சலூட்(டக்கூ)டும் எட்டு

இன்றைய உளநிலையில் எனக்கு (பகிடிக்கில்லை, மெய்யாகவே) எரிச்சலூட்டக்கூடிய எட்டுப்பேர்கள்

1. கணம் ஒரு சுனாமி கடிவதை எழுதுகின்றவர்கள் கூட வேண்டாம்; தினம் ஒரு 'ஏ' க்ளாஸ் 'பில் இன் த ப்ளாங்ஸ்' சுனாமி கவிதை கழிக்கிறவர்கள்

2. சுனாமி 'சுவாஹா' சொல்லிப் பலிச் சுழியாற முன்னாலே பத்துநாட்களுக்குட் பரபரப்பாக 'சுனாமியின் சுவடும் சுவறலும்' என்ற முப்பது பக்க 'புக்கு' 'பக்கு'ன்னு போடுகின்றவர்கள்

3. அநர்ந்தனம் பின்னான அகதிகள் நிதிசேர்ப்பு 'ஆட்'க்கும் அநாமதேயபிணங்களைக் காட்டிக் கணம் அழும் காட்சிக்குமிடையே 'மொடமொடக்கும்' ஸில்க் புடவை கனத்தோடு படபடக்கும் பேசும் ஹீரோயின் துயர் சுற்றிப் படரும் 'மெட்னி ஷோ ஸீரியல்' ஒவ்வொன்றையும் 'ஸ¤னாமி ·வ்வோல்ஸ் அலார்ம்' இற்கு அள்ளிச்சுருட்டிக்கொண்டு ஓடுகின்ற இடைவெளிக்குள்ளே விம்மி விம்மி மெய்மறந்து ஓயாது ஓலத்துடன் பேசிப் பார்க்கின்றவர்கள்

4. உட்கருத்துகளைவிட்டுவிட்டு பதிவுத்தலைப்புகளின்மேல் பதிலுக்குப் பெரும்பதிவாய்ச் சண்டைபோட்டுக்கொண்டும் படியாதவர்கள்

5. பாவப்பட்டு யாரோ பத்திரமாய் ஆஸ்பத்திரியிலே சேர்த்த பிணத்தை அதன் சொந்தங்களுக்குக் கொடுக்க அடாவடித்தனமாக "பொணம் பேர்ல வெட்டுடா என் பாக்கட்டு உள்ளாற பணம்" என்று 'பேஜார்' பண்ணுகிறவர்கள்

6. பாதிக்கப்பட்டவருக்குப் போகிற நிவாரணத்தைப் பாதி வழியிலே கத்திவிளிம்பு துப்பாக்கிமுனையிலே கடலிலிருந்து முப்பது காததூரத்திலேயிருக்கும் தன்னாட்கள்வீதிக்குக் திருப்பிக் கறக்கின்றவர்கள்

7. சென்றவாண்டை இன்னும் சபிப்பதா வந்தவாண்டை வாவென்று வாழ்த்துவதா என்று புரியாமல், குழப்பத்தில் சபித்துக்கொண்டே வாழ்த்துகின்றவர்கள் அல்லது வாழ்த்திக்கொண்டே சபிக்கின்றவர்கள்

8. எதுக்கெடுத்தாலும் இம்மென்னும் முன்னே 'பிடிக்காத பத்து', அம்மென்றால் 'எட்டிக்காய் எட்டு' என்று பொத்தாம்பொதுவாக சுனாமி பேரிலே வாதப்பிரதிவாத அர்ச்சனை செய்கின்றவர்கள், இந்த அட்டார்ச்சனையைத் தொடர்ந்து செய்யப்போகின்றவர்கள்